பாடல் எண் : 63 - 10
நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழுப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.
10
பொ-ரை: நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.
கு-ரை: நால்வர். -சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் உற்ற -பொருத்தமான. நல்மொழி-நல்ல உபதேச மொழி. பற்றும் -நம்மைப் பிடிக்கும். பாறும்-அழியும்.