|
பொ-ரை: வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள். கு-ரை: வேழம்பத்து ஐவர் - உயிருக்கு ஏளனத்தைத் தரும் ஐம்பொறிகள். வேழம்பம் என்ற சொல்லுக்குக் கூத்து, ஏளனம், பரிகாசம் என்ற பொருள்கள் உள்ளன; ஏற்பன கொள்க. ஐவர் அர் விகுதி இழித்தற் பொருளில் வந்தது. வேண்டிற்று - விரும்பியதை. வேண்டிப்போய் - தானும் விரும்பிச் சென்று. ஆழம் பற்றி - துன்பப் படுகுழியினைப் பற்றி. ஆதர் - குருடர் அல்லது அறிவிலார். குரை - ஒலிக்கின்ற. தாழும் - வணங்கும். சால - மிக. சதுரர் - சதுரப் பாடுடையவர். |