பாடல் எண் : 64 - 5
தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீர்வயற் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே
.
5
பொ-ரை: மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே.
கு-ரை: தளிர்கொள் - தளிரின் நிறத்தைக்கொண்ட. பிளிறு வாரணம் - பிளிறித் தம்மை அடரவந்த யானை. ஈருரி - உரித்ததோல். நளிர் - குளிர்ந்த தன்மை. நீர் - கங்கை. மேலும் நயந்தது - அப்பெண்ணுக்கு மேலும் நயப்பை உண்டாக்கியது என்றோ அச்சடையின் மேலும் அவள் நயப்புச் சென்றதென்றோ கொள்க.