பாடல் எண் : 64 - 6
நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பில்
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத மடையவல் லார்களே.
6
பொ-ரை: வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள்.
கு-ரை: நமக்கும் பிறர்க்கும் நாதராவர். கோதை மாது - மாலை சூடிய மங்கை. கோயில்கொண்ட ஆதி எனப் பிரிக்க. ஆதி - முதல்வன். கோழம்பம் அடையவல்லார்களே நாதராவர் என்க.