பாடல் எண் : 65 - 11
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே
.
11
பொ-ரை: மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும், பூவனூர் இறைவன் திருவடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான்.
கு-ரை: மைக்கடுத்த நிறத்து - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய. புக்கு - அடிவரையில் புகுந்து. மிக்கடுத்த விரல் - இராவணனது செருக்கை அழிக்கப் புகுந்த விரல். பக்கடுத்த பின் - தலைகள் பிளவு ஏற்பட்டு நெரிந்தவுடன். உய்ந்தான் - உயிர் பிழைத்தான்.