பாடல் எண் : 65 - 4
ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.
4
பொ-ரை: பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும், தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும், விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும்.
கு-ரை: ஆவின்மேவிய ஐந்து - பஞ்சகவ்யம். அமர்ந்து - விரும்பி. ஆடுவான் - அபிடேகம் கொள்வான். துதைந்த - செறிந்து பொருந்திய. மேவநூல் விரி - பொருந்த நூல்களில் சிறப்பிக்கப்படும். வெண்ணியின் - வெண்ணியாற்றின்.