|
பொ-ரை: கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து, ஐயப்பட்டபொருளன்று இது; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர். கு-ரை: அனுசயப்பட்டு - ஒருவரோடு ஒருவர் பகைமையுற்று. அது இது என்னாதே - அது நன்று இது தீது, இது நன்று அது தீது என்று மாறுபடாமல். உலகியல் வாழ்விலும் சமய நெறியிலும் இது பொருந்துவதொன்று. உலகில் இவ்வாறு போட்டியிட்டுப் பகைமை கொள்வார் பலர். சமயநெறியிலும் ஒரு சமயத்தவர் மற்றவரை இகழ்தல் உண்டு ஆதலின் இரு நெறியார்க்கும் பொருந்துவதொன்று இது. கனி மனத்தொடு - கனிந்த மனத்தொடு. தலையான மனிதர் - சிறந்த மனிதர். |