பாடல் எண் : 66 - 1
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.
1
பொ-ரை: அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகாலவிடத்தை உண்டவனும், பூதங்களுக்கு நாயகனும், பொன்வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும், உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித்தொழுதால் நம் பாவங்கள் கெடும்.
கு-ரை: ஓதம் - நீர்ப்பெருக்கு. ஆர் - பொருந்திய. நாயகன் - தலைவன். பொன் - பொன்மயமான. இறை - தலைவன். பறையும் - அழியும், நீங்கும்.