பாடல் எண் : 67 - 6
அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
6
பொ-ரை: பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.
கு-ரை: அற்று - ஆசையற்று. பற்றின்றி - ஆசை சிறிதேனுமில்லாமல். பற்று இன்றி அற்று எனமாற்றி ஆசை சிறிதும் இல்லாமல் விடுத்து என்றலுமொன்று. யாரையும் இல்லவர்க்கு - யாரையும் இல்லாத முற்றத்துறந்த துறவியர்க்கு. உற்ற - பொருந்திய. உறைபதி - உறைகின்ற தலம். தெற்று - கட்டப்பட்ட. கற்றுச் சேர்பவர்க்கு - இறைவன் திருப்பெயர்களைக்கற்று அடைய வல்லவர்களுக்கு. கருத்தாவது - அறிதற்குரிய கருத்துப் பொருளாவதாகும்.