|
பொ-ரை: திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர், வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர்; யானையின் தோலைப் போர்த்த மணவாளர்; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர். கு-ரை: ஆரணம் - வேதங்களின் தொகுதி. ஆரணப்பொருளாம் அருளாளனார் - வேதப் பொருளாய்விளங்கும் கருணையாளர். வாரணத்து உரி - யானையினது தோல். நாரணன் - திருமால். நண்ணி - சென்றடைந்து. காரணன் - எல்லாவற்றிற்கும் நிமித்த காரணன். கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க. அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலுமாம். |