|
பொ-ரை: மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு, முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன், தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும், நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன். கு-ரை: மேகம் பூண்டதோர் மேரு வில் - மேகங்கள் வந்து படியும் இமயமலையாகிய வில். எயில் - திரிபுரம். சோகம் பூண்டு - துன்பம் மேற்கொண்டு. அழல்சோர - நெருப்புப்பற்ற. தொட்டான் - எய்தான். பாகம் பூண்டமால் - இடப்பாகத்தே உறையும் திருமால். திருமாலை இடப்பாகத்தே மனைவியாகக் கொண்டவன் என்றபடி. ஹரி அர்த்தர் என்ற சிவமூர்த்தம் குறித்தவாறு. பங்கயத்தான் - பிரமன். திருமால் பிரமரோடு நாகம் அணிந்து கூத்தாடும் நள்ளாறன் என்க.
|