பாடல் எண் : 69 - 10
பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.
10
பொ-ரை: உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
கு-ரை: பாருளீர் - உலகின்கண் உள்ளவர்களே! பருவரை - பெரிய மலை. பேருமாறு - பெயரும்படி. கார்கொள் நீர் - கருமை நிறத்தைக் கொண்ட தண்ணீர். இராவணனுக்கு அருள் செய்தது உலக மறிந்த நிகழ்ச்சியாகலின் பாருளீர் இதுகேண்மின் என விளித்தார்.