பாடல் எண் : 7 - 10
உள்ள மேயொ ருறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வய லாரூ ரமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.
10
பொ-ரை: உள்ளமே! நான் ஓர் உறுதி உரைப்பன்; கேள்; கங்கைவெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு, நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து; வணங்கு.
கு-ரை: 'ஒன்றுறுதி' - என்பதும் பாடம்; அதனை உறுதி ஒன்று என மாறுக. வெள்ளந்தாங்கும் சடை - உலகத்தை அழிக்கும் பெருவெள்ளமாய் விரைந்துவந்த கங்கையைத்தடுத்த சடை வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன். அள்ளல் - சேறு. சேறும் நீருமாய்ச் சிறந்த வயல்கள் சூழ்ந்த ஆரூர் என்றபடி. வள்ளல் - தியாகேசன். சேவடி - செம்மையான திருவடிகள்; சிவந்த எனினும் பொருந்தும்.