பாடல் எண் : 7 - 4
துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக் கிராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்று மிடையறா
அன்ப ராமவர்க் கன்பரா ரூரரே.
4
பொ-ரை: துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும் பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான். (இவ்வியல்புடையார்க்கே முதல்வனும், அன்பனாய், அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி.)
கு-ரை: இறைவன் அன்பர்க்கன்பராம் தன்மை கூறுகிறது இத்திருப்பாடல். துனபெலாம் அறநீங்கி - இன்பங்களினின்று நீங்கியது போலத் துன்பங்களினின்றும் முற்றிலும் விடுதலை பெற்று. துன்பங்களை இன்பங்களாகவோ, தமக்குத் தொடர்வில்லாதனவாகவோ கருதும் மனஇயல்பு பெற்று என்றபடி. அற - முற்றிலும். சுபத்தராய் - நலஞ்சான்ற சிந்தையராய், உவகையுள்ளவராய் என்றபடி. சுபம் - நலம். இடையறா அன்பு, தைலதாரை போன்று இடையறவில்லாத அன்பு.