|
பொ-ரை: ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு, அடங்காத ஐந்து புலன்களைக் குற்றமறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக. கு-ரை: முருட்டு மெத்தை - முரட்டுத் தன்மைவாய்ந்த படுக்கை. இறந்தபின் கிடத்தும் ஈமப்படுக்கை. முன்கிடத்தா முனம் - எல்லோர் முன்னிலையிலும் கிடத்துவதற்கு முன்னரே. அரட்டர் ஐவர் - வலிய தீயவர்களாகிய ஐம்பொறிகள். ஆசறுத்திட்டு - குற்றம் தீர்த்து அவற்றால் விளையும் தீமைகளை மாற்றி நல்வழியில் செலுத்தி. முரட்டடித்த - முரட்டுத்தனத்தால் நடத்திய. அரட்டடக்கி - குறும்புகளை அடக்கியவன். யாக்கை நிலையாது ஆகலின், அஃது உள்ள போதே விரைந்து திருவாரூர் அடைந்து உய்க என்றபடி. |