|
பொ-ரை: இவள்நம்பால் ஒருநெறிப்படாதபலபேச்சுக்களைப் பேசத்தொடங்கிவிட்டாள். இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் (அதாவது, இவள் தனித்துள்ளபோது) ஆரூர் அரன் என மொழிவாள், என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதிவிடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது! கு-ரை: செவிலி தலைவியின் காதலொழுக்கத்தை நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்தியது இது. அவணம் அன்றெனின்: அவண் - அவ்விடம்; அவணம் - அவ்விடத் தேம்; எனவே, யாம் இவள் உள்ள அவ்விடத்தேம் ஆதல் இல்லை எனில் என்றபடி. ஆரூர் அரன் எனும் என்பதில் எனும் - செய்யும் என்னும் முற்று. தவனி - காமத்தீயால் தபிக்கப்பட்டவள். 7,8 ஆவது திருப்பாடல்கள் முதல்வனைக் கண்டுணரும் ஆன்மாக்கள் அவனால் வசீகரிக்கப்பெற்று உலகியல் தழுவாது அருள்வயப்பட்டுச் சீவன் முத்தராம் தன்மையை அகப்பொருள் மேல் வைத்துக் குறிப்பவை. |