பாடல் எண் : 70 - 10
நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
10
பொ-ரை: நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய, குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும்.
கு-ரை: நிலையினார்வரை - ஊழிதோறூழி முற்றும் அழியாது நிலைபெறும் அரிய மலையை. தன் உடல் வலிமையின் நிலையிற் பொருந்தி அதன் எல்லையிலே நின்று. விறல் - வலிமை. குலையினார் இன் சாரியை, பொழில்; குலைகளை உடைய சோலை. தவமாகும் - சிறந்த தவம் அதுவேயாகும்.