பாடல் எண் : 70 - 3
மாடு தானது வில்லெனின் மாநுடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.
3
பொ-ரை: செல்வம் இல்லையென்றால், மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை. ஆதலால், பல மாலைகளாற் கூட, நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும்.
கு-ரை: மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால். செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர். பாடு - பக்கம். செல்வாரும் என உம்மைதொக்கது. மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை. அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள். இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான்.