பாடல் எண் : 70 - 6
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.
6
பொ-ரை: பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை "எம்பிரான்" என்று ஏத்தவல்லவர்க்கு, வெம்புதற்குக் காரணமாகிய நோயும், துன்பமும், வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை.
கு-ரை: வெம்பும் - உடல் வெதும்பும். வெறுமை - வறுமை. இடர் - துன்பம் துயர் என்பன வேறுபாடுடையன. ஒன்று மனத்துன்பம், மற்றொன்று உடல் துன்பம், மூன்றாவது பிறவித் துன்பம், இவ்வாறு கொள்ளலாம்.
சூழ் வினை - நம்மைச் சூழ்ந்துள்ள வினைப் பயன்களாகிய இவை. கொம்பனார் பயில் - பூங்கொம்பு போன்றவர்களாகிய மகளிர் பயில்கின்ற.