பாடல் எண் : 70 - 8
நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையொர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.
8
பொ-ரை: நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமாதேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை.
கு-ரை: நாறு - மணம் கமழ்கின்ற. சாந்து - சந்தனம். மாறு - ஒப்பு. கூறனார் - உடலில் இடக்கூற்றை அளித்தவர். ஊறுவார் - செல்லுவார். உறுவார் என்பது முதல்நீண்டு ஊறுவார் என்றாயது. ஊனம் - குற்றம்.