பாடல் எண் : 71 - 1
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
1
பொ-ரை: விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான், தம் அங்கையில் தருப்பையும், மலர்களும் கொண்ட அழகிய, குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான்.
கு-ரை: குசை - தருப்பை. கோசம் - புத்தகம்; இறைவனது முழுமுதல் தன்மைகூறும் பதிகங்களில் ஒன்று. வசையில் - குற்றமற்ற. மங்கல வாசகர் - மங்களவாசகமாகிய வேதவாழ்த்துக் கூறும் அந்தணர். மணிவாசகரைக் குறித்ததாகக் கூறுவாரும் உளர். இசைய - தம் திருமேனியோடு பொருந்த. ஒன்றாயினான் - ஓருருவமாயினான்; மாதொரு கூறனாயினான் என்றபடி. விசையமங்கையுள் - திருவிசயமங்கை என்னும் தலத்துள். வேதியன் - வேதங்களை அருளிச் செய்தவன்.