பாடல் எண் : 71 - 10
இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.
10
பொ-ரை: இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும், வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர்.
கு-ரை: விலங்கல் - மலை. கயிலைமலையிடத்தே ஊன்றிய திருவிரலை உடைவன் என்பார் விலங்கல்சேர் விரலான் என்றார். நலஞ்செய்வார் - தம்முயிர்க்கு நன்மை செய்தவராவர். நாடி - அடைந்து.