பாடல் எண் : 71 - 5
பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே
.
5
பொ-ரை: ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே, அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான்.
கு-ரை: பொள்ளல் - பொத்தல். ஒன்பது ஓட்டைகளை உடைய வீடாதலின் உடலைப் பொள்ளல் ஆக்கை என்றார். உள்ளல் - தன்னை நினையும்படிச் செய்து. அகத்தில் - உள்ளே. கள்ளமாக்கி - வஞ்சகத்தை மனத்தே உளதாக்கி. கலக்கிய - மனத்தை அலைத்த. கார்இருள் - மிக்க இருளை உடைய அறியாமையை. விள்ளலாக்கி - நீங்கும்படி செய்து, உள்ளல் நோக்கி - நான் தியானம் செய்வதைப் பார்த்துக்கொண்டே. உள்ளுள் - உள்ளத்திற்குள்ளே. உறையும் - எழுந்தருளியிருக்கும்.