பாடல் எண் : 72 - 10
தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தன னென்பரே.
10
பொ-ரை: நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக்கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திருவிரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர்.
கு-ரை: தருக்கி - செருக்கி. வெற்பது - கயிலைமலையை. தாங்கிய - சுமந்த. வீங்கு - பெரிய. அரக்கனார், ஆர் இழித்தற்பொருளில் வந்தது. பீழை செய்யினும் பிழைத்ததுணர்வராயின் பொறுத்தருளுவன் என்க.