பாடல் எண் : 72 - 2
செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம்
கையி லாமல கக்கனி யொக்குமே.
2
பொ-ரை: சிவந்த திருமேனியனாய்த் தேனும், பாலும், தயிரும், நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான்.
கு-ரை: செய்ய - சிவந்த. மையலாய் - அன்பு மயக்கம் கொண்டு. கையில் ஆமலகக் கனியொக்கும் - உள்ளங்கையில் நெல்லிக்கனியை ஒத்து வெளிப்படையாய்த் தோன்றி அருள் செய்வான்.