பாடல் எண் : 72 - 3
ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புநிதனே
.
3
பொ-ரை: நீலக்குடி உடைய பெருமான், கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன். உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன். திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன். திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன்.
கு-ரை: ஆற்ற - மிக. ஆயிழையாள் - அழகிய அணிகலன்கள் அணிந்தவள். ஒரு கூற்றன் - ஒரு பாகத்தின்கண்ணே உடையவன். கோலமதாகிய - அழகிய. போற்றினார் - தன்னைப் போற்றியவர்களது. இடர் - துன்பங்களை. புனிதன் - தூயவன்.