பாடல் எண் : 72 - 4
நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.
4
பொ-ரை: நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன்; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன். நீலக்குடி உறையும் மலமற்றவன்; காலன் உயிர் போக்கிய கடவுள்.
கு-ரை: நாலுவேதியர்க்கு - நான்கு வேதமுணர்ந்த அந்தணயோகியர்க்கு. நால்வராவர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். இன்னருள் - இனிய திருவருளைச் செய்யும். ஆலன் - கல்லாலின் நிழற் கீழ் இருப்பவன். ஆலநஞ்சு - ஆலகாலமாகிய விடம். கண்டத்து அமர் நீலன் - கழுத்திலே பொருந்திய நீலநிறத்தை உடையவன். நின்மலன் - குற்றமற்றவன். காலன் - காலனுக்குக் காலன்.