பாடல் எண் : 73 - 3
மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
3
பொ-ரை: மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அருச்சித்தார்கள்.
கு-ரை: மாகாளி - பெருமைக்குரியவளாகிய காளிதேவி. வெங்கதிர்ச் செல்வன் - சூரியன். விண்ணொடு மண்ணும் - தெய்வ லோகத்திலுள்ளாரொடு நிலவுலகிலுள்ளவர்களும். நேர் - நேர்ந்து. சங்கு சக்கரதாரி - சங்கு சக்கரம் ஆகியவற்றைத் தரித்தவனாகிய திருமால். சதுர்முகன் - நான்முகனாகிய பிரமன். அர்ச்சித்தார் - மலர்தூவி வழிபட்டார்.