பாடல் எண் : 74 - 1
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
.
1
பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! வெண்தலையைக் கையில் உடையவனும், எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன், கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான். அவனை விடாது விரும்பியுறுவாயாக.
கு-ரை: ஊறு விரும்பிவிடேல் - கேடுகளை விரும்பி வாணாளை வீணாளாக்கவிடாதீர். கரும்பின் ஊறல் - கரும்பின் சாறு. கலந்தார்க்கு - மனம் ஒன்றியவர்கட்கு. இரும்பின் - இரும்பு போன்ற. ஊறல் அறாததோர் - நிணக்கசிவு - அறாததொரு. வெண்டலை ஏந்தியவன் என்க.