பாடல் எண் : 74 - 3
மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
.
3
பொ-ரை: எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும், தானவர்க்கு இன்சுவையாகவும், முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும், நெற்றிக்கண்ணனாகவும், பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
கு-ரை: வானவர் மருந்து தானவர்க்கு இன்சுவை என்க. தேவர்களுக்கு அருமருந்து போல்வான். அசுரர்க்கு இனிய சுவைபோல்வான். தேவர்கட்கும் அசுரர்கட்கும் போகபோக்கியங்கள் அருளியவன் என்க. புரிந்த - முறுக்குண்ட. புன்சடை - மெல்லியசடை, பூண் பொருந்து முலை என மாறுக. பூண் - அணிகலன்கள்.