|
பொ-ரை: மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய, குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர். கு-ரை: முடி உரத்தை - தலைகளோடு வலிமையையும். ஒல்க - குறைய. அடர்த்தான் - நெரித்தான். குரக்கினம் - குரங்குக் கூட்டங்கள். குரங்குக்கா என்ற ஊர்ப்பெயர் காரணம் குறித்தது. குரங்குகள் விளையாடும் சோலை என்க.வரத்தன் - மேன்மையுடையவன். வரம் அருள்செய்பவன். பெற - வணங்குதலைப்பெற. வரதன் - தகர ஒற்று விரித்தல் விகாரமுமாம். |