பாடல் எண் : 76 - 10
வன்னி கொன்றை யெருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவ னொண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.
10
பொ-ரை: இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.
கு-ரை: எருக்கு - எருக்க மலர். 'வெள்ளெருக்கரவம் விரவும் சடை' என்றார் பிறிதோரிடத்தும். மலை - கயிலைமலை. உன்னியே சென்று - நினைவு கூர்ந்தவனாய் அருகிற் சென்று. எடுத்தவன் - தூக்கியவன். ஒண்திறல் - விளங்கிய வலிமை. தன்னை - இராவணனை. வீழ - கீழே விழும்படி. கன்னிமாமதில், சமாதி என்னுமலங்காரம்; புதிய மதில் என்றும், பிறர் நெருங்கா மதில் என்றும் பொருள்படுதல் அறிதற்குரியது.