பாடல் எண் : 76 - 5
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று வியந்திட லேழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.
5
பொ-ரை: அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.
கு-ரை: பொத்தல் - ஓட்டைகளை உடைய. மண்சுவர் - மண்சுவராலாகிய. பொல்லாக் குரம்பை - தீமைகளை விளைக்கின்ற சிறுவீடு போன்றதாகிய உடலை. ஒன்பது ஓட்டைகளையும் அழிந்து படக்கூடிய தன்மையையும் உடையது உடல். உயிர் அதனுள் இருந்து நீங்குவதாகிய இயல்புபற்றி உடலை வீடு என்றார். மெய்த்தன என்று - உண்மையானது என்று. வியந்திடல் - வியவாதே. ஏழைகாள் - அறிவில்லாதவர்களே. சித்தர்களும் பத்தர்களும் வாழ்கின்ற கானூர் என்க. கருமம் - நாம் செய்தற்குரிய செயல்.