பாடல் எண் : 77 - 5
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5
பொ-ரை: நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால், அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன்; திண்மை உடையவரும், சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
கு-ரை: நாளும் எண்ணி - ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாழ்நாட்களைக் கணித்து. எரி அயில் - எரியும் நெருப்புப் போன்ற கூரிய வேல். துண்ணென் தோன்றில் - நடுக்கம் உண்டாகும்படி எனக்கு முன் தோன்றிவந்தால். துண்ணென்றொன்றில் எனவும் பாடம். துரக்கும் வழி - அவனை ஓட்டும் வழியை. கண்டேன் - கண்டுபிடித்து விட்டேன். திண்ணன் - வலியன். அண்ணலார் - தலைமைத் தன்மையுடையவர். என்னுக்கு - எதற்கு?