|
பொ-ரை: தேடிவைத்த செல்வமும், பெண்களும், ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார்? சித்தரும், சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு? கு-ரை: வைத்த மாடு - நிலையென்று தேடிச் சேமித்து வைத்த செல்வங்கள். மடந்தை நல்லார்கள் - மனைவியர். ஒத்து ஒவ்வாத உற்றார்களும் - செல்வம் உள்ளபோது ஒத்தும் இல்லாதபோது ஒவ்வாதும் புறத்தால் கலந்து அகத்தால் கலவாத உறவினர். என் செய்வார் - அச்சம் தரும் இறப்பு வரும்போது நமக்கு என்ன உதவியைச் செய்வர்? சித்தர் - அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவரைச் சித்தர் என்பது, பெருமான் சித்திகளின் வடிவாக இருப்பவர் என்றோ அறிவு மயமாய் இருப்பவர் என்றோ பொருள் கூறுக. அத்தர் - தலைவர். |