பாடல் எண் : 77 - 8
குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே
.
8
பொ-ரை: நெஞ்சமே! குலங்கள் என்னசெய்யும் திறத்தன? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன? மனம் அசைந்து நீ நின்றுசோராதே; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்காக?
கு-ரை: குலங்கள் - வருணாசிரமங்களாகிய சாதிகள். குற்றங்கள் - நாம் செய்தனவாய தவறுகள். என் செய்வ - என்ன தீமையைச் செய்யப் போகின்றன. துலங்கி - மனம் வருந்தி. சோர்ந்திடல் - வருந்தாதே. இலங்கு- விளங்குகின்ற. அலங்கனார் - மாலை அணிந்தவர், அல்லது ஒளியோடு கூடியவர்.