பாடல் எண் : 79 - 1
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
1
பொ-ரை: வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.
கு-ரை: வெள்ளெருக்கு - வெள்ளெருக்க மலர். அரவம் - பாம்பு. விரவும் - கலந்தணிந்துள்ள. சடை - சடையையுடையவன். பொற்கழல் - அழகிய கழலணிந்த திருவடி. உள்ளிருக்கும் உணர்ச்சி - மனத்திற்குள் நினைத்துக்கொண்டிருக்கும் உணர்ச்சி. இல்லாதவர் - இல்லாதவர்கள். நள்ளிருப்பர் - சென்று நடுவில் இருப்பார்கள். நரகக் குழியில் - பாவமானவை செய்தார் செய்த தீவினை துய்க்குமிடத்தில்.