பாடல் எண் : 79 - 5
செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா
அங்கி யின்னுரு வாகி யழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
5
பொ-ரை: சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.
கு-ரை: செங்கண்மால் - சிவந்த நிறத்தை உடைய செந்தாமரைக் கண்ணனாகிய திருமால். அறிவொணா - அறிதல் ஒண்ணாத. அங்கி - நெருப்பு. அழல்வதோர் - நெருப்புப் போலச் சீறுவதொரு. பொங்கு - சினம் பொங்குகின்ற. அரவன் - பாம்பை அணிந்தவன். இன்பு - இன்பம்.