பாடல் எண் : 79 - 7
கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடின னென்பதன் முன்னம்நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே
.
7
பொ-ரை: கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.
கு-ரை: கையினோடுகால்கட்டி - இறந்தவுடன் கைகளையும் கால்களையும் துணியால் கட்டி. உமர் - உம்மவர். உம்மைச் சேர்ந்த உறவினர். ஐயன் வீடினன் என்பதன் முன்னமே - குடும்பத் தலைவனாயிருப்பவன் இறந்தான் என்று சொல்வதன் முன்பாகவே. பொய்யில்லா - பொய்மையில்லாத; தன்னை வேண்டியவர்க்கு அருள் வழங்குதலில் பொய்யில்லாத. மை - கருமை. வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.