பாடல் எண் : 8 - 10
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்ச மஞ்சுரமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே.
10
பொ-ரை: வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச, " ஆயிழையே! அஞ்சல்! அஞ்சல்!" என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
கு-ரை: வஞ்சரக்கன் - வஞ்ச அரக்கன் என்பதன் தொகுத்தல். வஞ்சத்தன்மையுடைய இராவணன். கரம் - கைகள். அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் (5+5+6+4 = 20) இருபது. இருபது தோள்களும். இறநொறுங்க. பஞ்சின் மெல் விரலாலடர்த்து - இராவணனது ஆணவத்தை மட்டிலுமழித்து அவனை நிக்ரகத்தால் அநுக்கிரகம் செய்வான் வேண்டி அடர்த்தவராதலின் பஞ்சினும் மெல்லிய விரலால் அடர்த்தார் என்றார். வலிய ஊன்றினால் அவன் அழிந்திருப்பான் என்பது கருத்து. ஆயிழை அஞ்சல் அஞ்சல் - இராவணன் கைலையங் கிரியைப் பெயர்த்த காலையில் அம்மலை துளக்கம் எய்தியது. அதனால் உமையம்மை அஞ்சிப் பெருமானைத் தழுவினாள். அவ் வச்சக் குறிப்பை உணர்ந்த இறைவன், "ஆயிழையே, அஞ்சாதே! அஞ்சாதே!" என்று கூறினான் என்பது கருத்து. ஆயிழை - ஆராய்ந்து கொண்ட அணிகலன்கள் அணிந்தவள்.