பாடல் எண் : 8 - 8
காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தாரன்னி யூரரே.
8
பொ-ரை: நெற்றிக்கண் உடையவரும், காலையே போய்ப் பலி ஏற்பவரும், வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டுவரும், ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே.
கு-ரை: காலை - தக்கபொழுது; காலைநேரத்தே எனினும் அமையும். பிச்சை கொள்வார் செல்லும் காலை நேரத்தே கடைத்தலை சென்றவர் என்று இகழும் புகழுரை இது. தேர்வர் - ஆராய்ந்து பெறுவர் (பக்குவ ஆன்மாக்களைப் பருவத்திற்சென்று ஆள்வர் என்றபடி). நெற்றிக்கண்ணார் என்று மொழிமாறுக.
மேலை வானவர் - மேலவராகிய தேவர்கள். புறங்காடு - ஊர்ப்புறத்தே அமைந்த இடுகாடு. பலரையும் புறங்காணும் காடு எனினுமாம். அரங்கு - ஆடுமிடம். சோலைசூழ் அன்னியூர் எனவும், வானவர் வந்து விரும்பிய, புறங்காடு அரங்காகக் கொண்ட அன்னியூரர் எனவும் இயைக்க.