பாடல் எண் : 80 - 3
அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
3
பொ-ரை: அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும், எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய, அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை, நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள்.
கு-ரை: அன்பின் - அன்பினாலே. ஆன் அமைந்து அஞ்சுடன் ஆடிய - பசுவிடமுளதாய ஐந்து பொருள்களை ஏனைய பொருள்களோடு அபிடேகம் கொண்ட. என்பின் - எலும்புகளாகும்படி. உரித்துக் களைந்தவன் - தோலைஉரித்து நீக்கியவன். ஆனையை உரித்து என்பின் யானையாகச் செய்தவன். அன்பிலானை - அன்பில் என்ற தலத்து எழுந்தருளியவன். அம்மானை - தலைவனை. அள்ளூறிய - செறிந்து ஊறிப் பெருக்கெடுத்த; அன்பு என்க. ஆர் அறிந்தார்கள் - யார் உண்மையில் உணர்வாராயினார்கள்.