பாடல் எண் : 82 - 10
பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.
10
பொ-ரை: பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும், ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன்.
கு-ரை: பாரமா - சுமையாக. மலை - கயிலைமலை. சீரமாக - சீரணிக்க; அழிய. சிரமம் என்றதன் மரூஉவாகக் கொண்டு துன்புற எனலுமாம். ஊன்றினான் - கால்விரலை ஊன்றினான். ஆர்வமாக - அன்புடனே. அழைத்து அவன் ஏத்தலும் - அழைத்து அவனை வணங்குதலும். வாரம் - அன்பு; அருள். 'வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்' என்பது ஓர்க.