பாடல் எண் : 83 - 2
வண்ட லம்பிய வார்சடை யீசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே
.
2
பொ-ரை: வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும், விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும், தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும்.
கு-ரை: அலம்பிய - ஒலித்த. வார் -நீண்ட. விண்தலம் - தேவருலகம். விகிர்தன் - வேறுபாடில்லாதவன். கண்டல் அம்கமழ். தாழைமலர்கள் மணம் வீசுகின்ற. அம், சாரியை, அல்லது அம் கண்டல் எனலும் ஆம். கண்டலும் - பார்த்தலும். காண்டலும் என்பது எதுகைநோக்கி கண்டலும் என்றாயது. கழலும் - நீங்கும்.