பாடல் எண் : 83 - 7
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
7
பொ-ரை: சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும், தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்தியஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும்.
கு-ரை: சினங்கொள் - கோபம்கொள்ளும். மால் - கரிய அல்லது பெரிய.கரி - யானையை. சீறிய - சினந்து உரித்துப் போர்த்த. ஏறு - சிங்கஏறு அல்லது காளை. இனங்கொள் -கூட்டம்கொண்ட. கனம்கொள் - மேகங்கள் தங்குதலைக்கொண்ட.