பாடல் எண் : 84 - 3
தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
3
பொ-ரை: தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞானநாயகனைச் சென்று நண்ணுவீராக.
கு-ரை: தேனைவென்ற - தேனினும் இனிய. சொல்லார் - சொல்லையுடைய பெண்கள். ஊனைவிட்டு - உடலையும் விட்டு. பெண்டிர் செல்வம் உடல் இவை பிரிவதன் முன்; இறக்குமுன்பு என்க. கானவேடர் - காட்டில் வாழும் வேடர். கருதும் - எண்ணி வழிபடும். ஞானநாயகன் - பேரறிவின் தலைவன். நண்ணும் - அடைந்து வழிபடுங்கள்.