பாடல் எண் : 84 - 7
மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் தன்னடி யேயடைந் துய்ம்மினே
.
7
பொ-ரை: உடம்பில் அழுக்குடையவரும், உடல் மூடுவாருமாகிய புத்தரது பொய்யை மெய்யென்று கருதிப் புகுந்து அவர்களுடன் வீழாதீர்; கையின்கண் மான் உடையான் ஆகிய காட்டுப் பள்ளியில் எம் ஐயன் திருவடிகளையே அடைந்து உய்வீராக.
கு-ரை: மெய்யின் - உடலின்கண். மாசு - அழுக்கு. உடல் மூடுவார் - உள் அழுக்கை மறைத்துப் புறத்தே மூடிக்கொள்வாராகிய புத்தர்கள். பொய்யை - அவர்கள் மெய்போலக்கூறும் பொய்மொழிகளை. புக்குடன்வீழன்மின் - பலரும் ஒரு சேரப் புகுந்து சென்று விழாதீர்கள்.