|
பொ-ரை: இடுகாட்டிற்கு ஓடி, விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே, பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர், குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர். கு-ரை: கானம் ஓடி - இடுகாட்டுக்குச் சென்று. கடிது எழு - விரைந்து எழும். தானமோடு தலைபிடியாமுனம் - நாம் வாழும் இடத்தின்கண் வந்து நம்முடைய தலைகளைப்பற்றி உயிர்கொண்டு போவதற்கு முன்பே. ஆனஞ்சாடி - பஞ்சகவ்விய அபிடேகம் கொண்டவன். உகந்த - மகிழ்ந்து எழுந்தருளிய. ஊனம் - இருவினைக் குற்றம். உண்மையில் நிற்பர் - உண்மையாகத் தோன்றி அருள்செய்வர். |