பாடல் எண் : 87 - 9
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.
9
பொ-ரை: சித்தர்களும், தேவர்களும், திருமாலும், நான்முகனும், புத்தரும், உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ, உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை.
கு-ரை: சேர் - புத்தமதத்தினரோடு சேர்ந்த. தேர் எனவும் பாடம். அமண்கையர் - அமண ஒழுக்கத்தினை உடையவர். மத்தர்தாம் அறியார் - சித்தர், தேவர், மால், நான்முகன் முதலானோர் புகழவும் புத்தர் அமண்கையர் முதலான உன்மத்தர் அறியார். மத்தர் தாம் - ஊமத்த மலர் அணிந்தவராய இறைவர் தம்மை. அல்லல் - துன்பம்.