பாடல் எண் : 88 - 2
பாடங் கொள்பனு வல்திறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்திரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
2
பொ-ரை: பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே!மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும்.
கு-ரை: பாடங்கொள்பனுவல் திறம் - பல கலைப் பிரிவுப் பாடங்களைக்கொண்ட வேதம் முதலிய நூல்களின் தன்மையாய அபரஞானம். கற்றுப்போய் - கற்றுச்சென்று. நாடங்குள்ளன - பல நாடுகளிலும் சென்று. தட்டிய - பொருந்திய. நாணிலீர் - பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பிரானடி பேணாதொழிந்தமையால் வெட்கமில்லாதோரே. மாடஞ் சூழ் - மாடவீடுகள் சூழ்ந்த. மருகற்பெருமான் - திருமருகலில் எழுந்தருளிய பெருமானது. திருவேடம் - அழகிய தோற்றத்தை.